ஆதியில்,வதிரி உல்லியனொல்லை அம்பாள் தேவஸ்தான பகுதியில் ஓர் வேப்பமரத்தின் கீழ் குடிசையமைத்து வாழ்ந்து வந்த ஓர் வயதான தம்பதியினரின் முன், கடல்கடந்து வந்ததாக அறியப்பட்ட வெள்ளைச்சேலை கட்டிய மூதாட்டி ஒருவர்,தான் அவ்விடத்தில் இருக்க விரும்புவதாக்க்கூறி மறைந்ததையிட்டு, அத்தம்பதியினர் அக்குடிசையை அம்பாளுக்கு ஆலயமாக அளித்து, தாம் அதனின்றும் அகன்றனர். அன்றுதொட்டு இந்நிலையம் வதிரியம்பதி வாழ் மக்களின் வழிபாட்டுத்தலமாக மாறியதாக கர்ணபரம்பரைக்கதை கூறுகின்றது. அன்றுதொட்டு இன்றுவரை மக்கள்பக்திச் சிரத்தையுடன் இவ்வாலயத்தைப் பூசித்து இறையருளும் அனுக்கிரகமும் பெற்று வாழ்ந்து வருகின்றனர்....
இற்றைக்கு 250 வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு அமையப்பெற்ற இவ்வாலயமானது அன்னையின் அருளாட்சியையும்,அனுக்கிரகத்தையும் கண்டு, பெற்று இன்புற்ற எமதுவூர் மக்களால் புனரமைக்கப்பட்டு, ஆவணி மாதத்து ரேவதி நட்சத்திரத்தில் மகாகும்பாபிடேகம் நடாத்தப்பட்டது. இக்கும்பாபிடேக தினத்தில் வருடந்தோறும் உற்சவம் ஆரம்பமாகி 14 நாட்கள் திருவிழாவும் , தேர், தீர்த்தோற்சவமும் நடைபெறுகின்றது. இத்திருவிழா நாட்களில் அப்பகுதி மக்கள் விரதமிருந்து அன்னையின் அருளுக்கு பாத்திரமாகி இன்புறுகின்றனர்.
இவ்வாலயத்தின் சிறப்பையும் மகிமையையும் எடுத்தியம்பும் நிகழ்ச்சிகள் இரண்டினைக் குறிப்பிடலாம்...
ஏறக்குறைய எழுவது வருடங்களுக்கு முன்பு,கோவில் உற்சவத்திற்கு வந்திருந்த ஒரு குடும்பம் வீடுதிரும்ப, அமாவாசை இருள் காரணமாகப்பயந்தபோது,வெண்ணிற உடையணிந்த மூதாட்டி ஒருவர், "பயம் வேண்டாம்,வாருங்கள்,யான் துணைவருகின்றேன்" என்று கூட்டிச்சென்றார். அவர்கள் வீட்டை அண்மித்ததும் சடுதியாக அம்மூதாட்டி மறைந்துவிட்டார்.. அங்கே கற்பூரமின்றி, கற்பூரவாசனையை அவர்களால் உணரமுடிந்ததாம்.. அடுத்ததாக,போர்ச்சூழல் காரணமாக ஊர்மக்கள் யாவரும் கோயிலுக்குச் சென்று தங்குமாறு படையினரால் பணிக்கப்பட்டிருந்தது. மற்றெல்லா ஆலயங்களிலும் குண்டு வீச்சினால் அவலங்கள் பல நிகழ்ந்தபோதும்,எமது ஆலயத்தின் சூழலில் பல குண்டுகள் விழுந்து சேதமேற்பட்ட போதும் எமது கோவிற்பிரகாரத்திலும்,சனநெரிசல் காரணமாக வெளிவீதியில் தங்கியிருந்த மக்கள் தானும், எந்தவித அவலத்திலும் சிக்கவில்லை. கோவிலின் மேற்கே, ரோட்டோரத்தில் உபதபால் நிலையம் குண்டுவிழுந்து சேதமுற்றது. கிழக்குப்பகுதியில் சில வீடுகளும்,தெற்கில் தோட்டத்திலும் குண்டுகள் விழுந்து சேதம்விளைத்தது. இருப்பினும் மக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதெல்லாம் அம்பாளின் அருளாட்சியின் மகிமை என்று வியந்த,அங்கு தங்கிய வெளியூர்க்காரர் ஆலயத்திற்கு பல அன்பளிப்புக்களை அளித்தமையும் வியப்புக்குரியதன்றோ ? ? ? பலவித போர்ச்சூழலில்,எமது ஆலயத்தில் நித்திய கருமங்களும், நைமித்திய பூசைகளும்,தினமும் மூன்று நேரத்திலும் கிரமமாக நிகழ்ந்து வருகின்றமை மக்களின் நம்பிக்கையையும், பக்திபரவசத்தையும் மேலும் மேலும் வளர வலுவூட்டுவதாக அமைகின்றன.. என்றும் அம்பாள் அருளாட்சியும்,அனுக்கிரகமும் எமது கிராம மக்களுக்கு கிடைக்கும்.
"நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத்தீர்ப்பு அம்பிகைக் கரம் தொழுதால் யாதும் அவள் தருவாள்"
COPY RIGHT 2010 VATHIRI.COM ALL RIGHTS RESERVED. CONCEPT & DESIGN BY ARUN K. [email protected]